Saturday 27 January 2018

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தஞ்சை மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகள்

திரு.எடப்பாடி மற்றும் திரு.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசானது எம. ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டினை வெகுசிறப்பான திட்டங்களுடன் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி தஞ்சையில் பல சிற்ப்புவாய்ந்த திட்டங்களை அறிவித்து உள்ளனர். அதன்படி, அவர்களது சமூக வலைதளம் மூலம் பெற்ற தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவையை பின் அளவீடாக அறிய பயன்படும் என்பதால் இப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

நெல் இரகத்திற்கு பெயரிடுதல்

1) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் இந்த ஆண்டு புதியதாக வெளியிடப்பட்ட நெல் இரகத்திற்கு “எம்.ஜி.ஆர் 100” என சற்று முன்னர் பெயரிட்டு, அந்த ரக நெல்லை பயனாளிக்கும் வழங்கினேன்.

பள்ளியை தரம் உயர்த்துதல்

2) கும்பகோணம் நகரத்தில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் படித்த யானை அடி நகராட்சி தொடக்கப் பள்ளியானது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.  மேலும் அப்பள்ளிக்கு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவுப் பள்ளி என்றும் பெயர் சூட்டப்படும். அப்பள்ளியில் சத்துணவு வழங்கப்படவில்லை என்பதை அறிந்தவுடன், மாண்புமிகு அம்மாவின் அரசு, சத்துணவு திட்டத்தின் பிதாமகன் புரட்சித்தலைவர் அவர்கள் படித்த பள்ளியில் உடனடியாக சத்துணவு மையம் தொடங்க ஆணையிட்டது. இங்கேயே சத்துணவு சமைக்க தனி சமையலறை கட்டப்படும்.

புதிய கால்நடை கிளை நிலையம்

3) திருபணந்தாள் ஒன்றியத்தில் திட்டச்சேரி, திருவோணம் ஒன்றியத்தில் கிழமங்கலம் ஆகிய கிராமங்களில் இரண்டு புதிய கால்நடை கிளை நிலையம் அமைக்கப்படும்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்

4) கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் விவசாயிகளின் நலன் கருதி 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கும், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர் மற்றும் வல்லம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகங்களில் தலா 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளுமாக ஐந்து கிடங்குகள் நபார்டு வங்கி உதவியுடன் ஏற்படுத்தப்படும்.

5) பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மின்னணு ஏலமுறை மென்பொருள் வசதி, மின்னணு ஏலக்கொட்டகை, பொதுவான வகைப்படுத்தும் கருவிகள் மற்றும் எடைமேடை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். (1.02 கோடி ரூபாய்). 

மின் வசதிகள்

6) தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் மின் விநியோகத்தை மேம்படுத்தும் பொருட்டு, பந்தநல்லூரில் புதிய துணை மின் நிலையம் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

7) மின் நகரில் புதிய 110/11 கி.வோ. துணை மின்நிலையம் 5.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

8) திருமலை சமுத்திரத்தில் புதிய 110/33-11  கி.வோ. துணை மின்நிலையம் 10.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

9) 110/11 கி.வோ. பூண்டி துணை மின் நிலையம், 2.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்படும்.

10) 110/11 கி.வோ.  ஊரணிபுரம் துணை மின் நிலையம் 2.12 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்படும்.

11) தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டத்தில் புதியதாக கணினி முறையில் மின்தடை பழுது நீக்கும் மையம் 44.95 இலட்சம்  ரூபாய் செலவில் நிறுவப்படும்.

12) பட்டுக்கோட்டைக்குட்பட்ட பேராவூரணி உப கோட்ட அலுவலகம் 35.00 இலட்சம் ரூபாய் செலவில் பேராவூரணி கோட்ட அலுவலகமாக மாற்றி அமைக்கப்படும்.

ரெகுலேட்டர் அமைத்தல்

13) கும்பகோணம் வட்டம், கும்பகோணம் நகரத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே மைல் 57/7-ல் நடைபாலத்துடன் கூடிய ரெகுலேட்டர் அமைப்பதற்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். 

தளமட்டச் சுவர்கள் அமைத்தல்

14) கும்பகோணம் வட்டம், சுந்தரப் பெருமாள் கோயில் கிராமத்தில் அரசலாற்றின் குறுக்கே மைல் 52/3-4ல் தளமட்ட சுவர் அமைக்கப்படும். (5.30 கோடி  ரூபாய்).

15) திருவிடைமருதூர் வட்டம், பவுண்டரிகாபுரம் கிராமத்தில் மாங்குடி வாய்க்காலுக்கு நீர் வழங்கும் பொருட்டு கீர்த்திமன்னார் ஆற்றின் குறுக்கே மைல் 63/1-2ல் தளமட்ட சுவர் அமைக்கப்படும். (4 கோடி  ரூபாய்).

தடுப்பணைகள் அமைத்தல்

16) ஒரத்தநாடு வட்டம், தாலயமங்களம் கிராமத்தில் தாலயமங்களம் ஏரி வடிகாலின் குறுக்கே எல்.எஸ்.1.60 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும்(50 லட்சம்  ரூபாய்).

17) ஒரத்தநாடு,வண்ணான்கொல்லைபட்டி கிராமத்தில் பனங்குளம் உபரி நீர்போக்கின் குறுக்கே எல்.எஸ்.2.00 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும்.(70 லட்சம்  ரூபாய்).

18) ஒரத்தநாடு, தோப்பு விடுதி கிராமத்தில் வண்ணான்வாரியின் குறுக்கே எல்.எஸ்.0.100 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும்.(60 லட்சம்  ரூபாய்)

19) ஒரத்தநாடு வட்டம், அருமலை கிராமத்தில் அருமலை வடிகாலின் குறுக்கே எல்.எஸ்.1.250 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும். (50 லட்சம்  ரூபாய்)

20) ஒரத்தநாடு வட்டம், வெள்ளூர் மற்றும் தொண்டாரம்பட்டு கிராமங்களில் பட்டுவானாச்சி வடிகாலின் குறுக்கே முறையே எல்.எஸ்.6.50 கி.மீ மற்றும் எல்.எஸ்.11.00 கி.மீ-ல் தடுப்பணை அமைக்கப்படும். (95 லட்சம்  ரூபாய்)

மருத்துவ வசதிகள்

21) தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3.28 கோடி  ரூபாய் மதிப்பில் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும்.

இவையாவும் அறிப்பாக(Announced on December'2017 last week in Thajavur) மட்டுமில்லாமல் திட்டமாக செயல்படுத்தி மக்களிடம் நடைமுறைபடுத்தப்பபடுகிறாத என பொறுத்திருந்து அறிய ஆவல்.


தமிழக பேருந்து கட்டண உயர்வு: மக்களை திசைதிருப்பும் முயற்சியா?

தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வு என்பது மக்களின் மீது பிரயோகிக்கப்பட்ட பலமான அஸ்திரமே. பேருந்து கட்டண உயர்விற்கு  பல காரணங்கள் இருப்பினும் எதிர்ப்பு என்ற ஒற்றைக்கருத்தே முன்னிலை பெறுகிறது.

இந்த விலை உயர்வானது மக்களினை திசைதிருப்புவதற்கானதாக இருக்கலாம் என்ற பல பார்வையும் வலுவாகிறது. அதாவது, கட்டண உயர்வுக்கான யூகங்களாக அறிய முடிவது யாதெனில்,

பல்வேறு அரசியல் குழப்பங்களால் விசையறியா திசைகளில் செய்வதறியாது ஆளும்  தலைவர்கள் மற்றும் எதிர்க்கும் தலைவர்கள் யாரென அறியமுடியாமல் மக்கள்  குழம்பியுள்ளனர். குழம்பிய குட்டையில் பாஜக, ரஜினி, கமல் போன்றோர் மீன் பிடிக்க வலை விரித்துள்ளனர். ஆளுங்கட்சியினர் பாஜக ஊடுருவிய அதிமுக வா? அதிமுக யார்? அதிமுக வின் அதிகார தலைமை யார்? திமுக மற்றும் தினகரனின் வசைகளுக்கான பதிலுரை? இது போன்ற பல வினாக்களினை மூழ்கடிக்கும் எண்ணமோ என தோன்றுகிறது. "எதிர்ப்பினை சம்பாதிப்பது எளிது. அதன்மூலம் பிரபலமடைந்து மக்களின் மறதியை பயன்படுத்தி ஏற்றமாக்க இயலும் என்பது வரலாறு. ஆட்சிப்பிழைகள் மக்களிடம் விரைவில் சென்றடையும். ஆனால் மறைந்துவிடும். நன்மைகள் சென்றடைய தாமதமானாலும் எளிதில் அழிக்க இயலாது. இவையாவும் பிழைகளுக்கு மட்டுமே துரோகத்திற்கல்ல". விலையேற்றத்தில் சிறுது குறைத்தாலும் ஆட்சியாளரின் நோக்கம் எளிதில் நிறைவேறும். பொறுத்திருந்து பார்க்கலாம். விலையேற்றத்தில் மாற்றம் வருமாயின் என் பார்வை தெளிவானதாகும். மேலும் அதிமுக மற்றும் தமிழக அரசியலில் பல மாற்றங்களை காண முடியும். எனினும் இந்த எதிர் போராட்டத்தின் மூலம் அதிமுகவின் தலைமையை திமுக போன்ற எதிர்கட்சிகள் இலவச பிரச்சார விளம்பரம் மூலம் கொண்டு சேர்ப்பார்கள் என்பது எனது தீர்க்கமான முடிவு.

அடுத்ததாக....

டீசல் போன்ற எரிபொருள்களின் கடுமையான விலையேற்றத்தினை மாநில அரசின் நிதிகொண்டு சீர்செய்ய இயலாத சூழ்நிலை. மாநில அரசின் கடுமையான நிதி நெருக்கடி நிலையினை கருதமுடிகிறது. நிதி நெருக்கடிக்கான முக்கிய காரணிகளாக GST, மத்திய அரசின் நிதி குறைப்பு(இயற்கை சீற்றங்களுக்கான் நிதி, மாநில அரசிற்கான நிதி ...), பல்வேறு அரசியல் குழப்பத்தால் வருவாய இழப்பு போன்ற பல வரிசைபடுத்த இயலும். கடுமையான நிதி நெருக்கடியில் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 100% உயர்வு என்பது சத்தமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. விவாதத்திற்காக வினோதமான எதிர்ப்பினை இறுதியில் எதிர்கட்சி அரங்கேற்றியது குறிப்பிடத்தக்கது. மக்களிடம் கொண்டு செல்லாமல் தவறியது எதிர்கட்சியில் மிகப்பெரிய தீர்மானிக்கப்பட்ட தோல்வி. மேலும் நிதி நெருக்கடியை ஆளும்தரப்பு மத்தியிடம் பெற இயலா தன்மையை மறுக்க இயலாது.

மேலும் பல காரணங்கள்...

போக்குவரத்து மேலாண்மை மற்றும் புதிய பேருந்து வாங்குதல், ஊழியர்களுக்கான சம்பளம் என பல சம்பிரதாய காரணங்கள் அடுக்க இயலும்.

சற்றுமுன் பேருந்து கட்டண உயர்வு குறைப்பதாக அறிவிப்பு வெளியாகி என் முதல் யூகத்தினை உறுதிபடுத்தியுள்ளது.

Monday 8 January 2018

அகிலம் போற்றும் பாரதத்தில் அனைத்தும் இந்தி மயமா?

நம் பாரதத்தை அகிலம் போற்ற மிக முக்கியமான காரணங்களுல் ஒன்று, "பல இனம்,  மதம் , மொழி மற்றும் பல சிறப்புடைய கலாச்சாரங்களைக்கொண்ட  இந்தியன் என்ற ஒற்றை உணர்வு". ஆனால் தற்பொழுது பலமொழியில் ஒரு மொழியினை மறைமுகமாக முன்னிறுத்துவதென்பது மற்றவர்களுக்கு வலியினையும், இந்தியன் என்ற ஒருமித்த உணர்வினையும் சிதைப்பதற்கான வழியாக அமைந்துவிடாதா ஆட்சியாளர்களே??

இன்றை இந்தி திணிப்பு என்பது ஆணவத்துடன் அதிகாரத்தை பயன்படுத்துவதன் வெளிப்பாடாக உணர முடிகிறது.

ஐக்கிய நாடுகளிகளின் சபையில் இந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்த இந்திய அரசு பல கோடி செலவு செய்ய தயாராக உள்ளது. நட்பு நாடுகளின் இசைவின் மூலம் ஐநா வில் நிறைவேற்றும் முயற்சியில் அரசு முன்னோக்கி நகருவதாக வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவின் பாராளுமன்ற பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல மொழி கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் இதன் விளைவு எப்படி அமையும். அனைத்து மொழியினரும் சரிசமமாக வரி செலுத்தும் போது, இந்திக்கு மட்டும் ஏன் வளர்ச்சி?

மற்ற மொழிகளை தாழ்த்தவில்லையென்றால், மற்ற மொழிகளுக்காக செய்த நடுவண அரசின் சலுகைதான் என்ன?

சிலரின் வினாக்கள், இந்தியை முன்னிறுத்துவதால் ஐநா வில் ஆங்கிலம் பயன்படுத்தலாமே? இந்தி ஒருவேளை அங்கீகரிக்கப்பட்டால், இந்திய பிரதிநிதியாக ஆங்கிலம் பயன்படுத்தினால் அது இந்தியாவுக்கும் இந்தியனுக்கும் மனக்கசப்பினை உண்டாக்காதா?

இது போன்ற முயற்சி தமிழ்நாடு, கேரளா  போன்ற மாநிலத்தவரும் இந்தியை கற்க வைப்பது என்பதுதான் அரசின் நரி தந்திரமா?

பல திணிப்பு முயற்சிகளைபோல் இதுவும் தோல்வியில் முடிவதே சிறப்பானதாகும். உலக அரங்கில் இந்தியனாக பெருமைபட இந்தி மொழியைவிட இந்தியன் என்ற உணர்வும் தாய் மொழி வழி ஞானமும் போதுமானதே என்பதை ஆட்சியளர் உணருவதே ஒற்றுமைக்கான நீரோட்டாமாகும். 

Monday 25 December 2017

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு: நிழல் நிஜமானது, இராஜ்ஜியம்?

ஆர்.கே.நகரில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் தொகுதிக்கு பல போராட்டங்களிடையே இடைத்தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. 

தேர்தல் முடிவில் ஜெயலலிதாவின் பெயர், கழகம் மற்றும் வெற்றி சின்னம் எனக்கூறப்படும் இரட்டை இலையுடன் தற்போதைய முதல்வர் மற்றும் துணை முதல்வர் அணி நாற்பாதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதாவின் பெயரைமட்டும் வைத்துக்கொண்டு சுயேட்சையாக களம் கண்ட தினகரனிடமும் அவரது வியூகத்தாலும் தோல்வியை தழுவியது. திமுக டெபாசிட் இழந்து 13% வாக்குகளை மட்டுமே பெற்றது. நிழல் நிஜமானால் ராஜ்ஜியம் எவ்வழியினாயினும்(+ or -) சரித்திரத்தில் இடம்பெறும் என்பர். சசிகலாவின் பயணத்தில் இதற்கு முக்கிய பங்கு உண்டு. 

இத்தேர்தல் முடிவில் அறியமுடிவது யாதெனில்....

  • திமுக வின்அரசிற்கெதிரான இராஜ தந்திரமான திட்டம் வெற்றியை பெற்றது.
  • நிழல் அரசியல்வாதியை நிஜ அரசியல்வாதியாக அரசியல் மக்கள் அங்கீகரித்துள்ளனர்.
  • தமிழக அரசியலில் தினகரன் தனக்கான இருப்பிடத்தை வலிமையாக துவக்கியுள்ளார்.
  • ஜெயலலிதாவின் பெயர், கழகம் மற்றும் சின்னம் வைத்துள்ள முதல்வர் அணியானது தனது வருங்கால அரசியல் அணுகுமுறையை சுயமுடிவில் தெளிவோடு முன்னெடுக்க கொடுக்கப்பட்ட மணியோசை.
  • பாரதத்தை ஆளும் கட்சியான பாஜக தன்னிலை அறிந்து கட்சியினை வளர்க்க மக்களின் போக்குடன் இணைந்து செயல்பட வேண்டும்.
  • நாம் தமிழரின் உரிமை குரளுக்கு மக்களிடம் மரியாதை உருவாகியுள்ளது.
திரு.தினகரனின் வெற்றியென்பது....
  • ஒற்றைத்தலைமையாக சுயமாக முடிவெடுத்து அதன் வழிதழுவிய முதுமையான அணுகுமுறைக்கான வெற்றி.
  • சமூக தளங்கள் முதல் ஆர்.கே.நகர் தேர்தல் களம் வரையிலான தினகரன் ஆதரவாளர்களின் கடினமான தேர்தல் உழைப்பிற்கான வெற்றி.
  • பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பொதுமக்களிடம் அணுகும் அசாதாரண முதிர்ந்த அணுகு முறை.
  • சூழ்நிலைகளுக்கேற்ப வியூகம் அமைத்து, அதற்கேற்ப அனைவரையும் கவரும் அரவணைப்புடன் கூடிய சகிப்புத்தன்மை.
  • ஆளுங்கட்சி மீதான அதிருப்தி வாக்குகளையும் அரசியல் போலி தன்மையையும் தனக்கு சாதகமாக வசீகரம் செய்துள்ளார்.
  • தன்நிலையை மாற்றாமல் விடாபிடியாக வியூகத்துடன் போரிடுதல் மற்றும் தன்னை நம்பி வருபவர்களுக்கு பாதுகாப்பு அரணை முன்னேற்பாட்டுடன் அமைத்தல்.
மொத்தத்தில் எது எங்கு தேவையென அறிந்து மக்களின் வாக்கினை கவர்ந்ததே அவரின் வெற்றி. இவையாவும் காந்தியை மீறிய பார்வையே...

இதன் விளைவு தமிழ்நாடு முழுவதும் பரவுமா என்பது திரு.தினகரனை வளர்த்த அவர்களின் அரசியல் எதிரிகளிடமே உள்ளது....

-கவியரசன் தங்கப்பன்

Monday 24 July 2017

காலச்சக்கரத்தில் தமிழக கழக முகவுரை

தட்பவெப்பம் அறியா கடுமையான ஏற்றத்தாழ்வு சூழலில் ஒளியினை வழங்கி தன் பரிமாணத்தை விளக்கி நம்மகம் உதித்ததே நீதியின் வழிவந்த உதய சூரியன். இச்சூரிய ஒளியே மனிதனின் வாழ்நெறியென்றால் மிகையல்ல.

சிந்து நதி தேசத்திற்கே தன் ஒளியினை வழியாக வடிவமைத்தது இந்த உதய சூரியன். பின்னர் காலச்சக்கரத்தில் சில நிகழ்வுகளால் தீமை கனலின் தாக்கம் அதிகமாகியதின் விளைவில்,  இலை முளைத்து பசுமை வழங்கி மக்களிடம் செழித்தது.



இலையின் இரண்டு தலைகளும் தண்டிற்காக(தொண்டனிற்காக), தண்டினால்(தொண்டனால்), தண்டினை(தொண்டனை) பலமாகவும் கரமாகவும் கொண்டு வளர்ந்து உதிர்ந்தது. இன்று இலையின் தண்டு மட்டும் தடமறியா வினோத காற்றின் அலையில் கலங்கி நிற்கிறது. ஆனால் சூரியனில், கதிரொளி பல சிதறலுடன் பரந்து விரிந்து பிறப்பிடமறியாமல் மிளிருகிறது.




சூரியனுக்கும், இலைக்கும் மாற்றாக முரசு முழங்க தொடங்கிய அதே நேரத்தில் பழம், மலர் போன்றவையும் போட்டியிட்டது. ஆனால் மக்களோ, சூரியனும் இலையும் போதுமானது என்று மித்த சிந்தனையில் ஒத்த கருத்தாக உதிர்த்துவிட்டனர்.

பழம் ஒரே வகுப்பினை சார்ந்ததால் அதன் சுவையானது பலதர மக்களிடம் வரவேற்பை இழந்தது. அதாவது, மாமரத்தை மட்டுமே சார்ந்ததால் சுவைவிரும்பா மக்கள் திசை மாறி அதனை ஒதுக்கிவிட்டனர். 

முரசின் முழக்கமானது பல இரைச்சலை ஏற்படுத்தியது.அதாவது தெளிவற்ற ஒலியை மக்களுக்க வழங்கியதால் மக்களால் வெறுக்கப்பட்டது.

மலரின் நறுமணம் சில வகுப்பினரிடையே துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் மக்களிடம் வெறுப்பினை ஏற்படுத்தியது.

கால சக்கரத்தின் கடைசியில்(2016), மக்கள் தீர்ப்பில் இலைக்கு முதலிடமும் சூரியனுக்கு இரண்டாம் இடமும் வழங்கி வெப்பமும் பசுமையுமே வேண்டுமென மற்றவர்களை துடைத்தெறிந்துவிட்டனர்.



இன்றோ, குருடன் வீட்டில் திருடன் புகுவது போன்று, இலையுதிர்ந்த காட்டில் தண்டினை சிதறடிக்கும் பணியில் மலரின் வேலை முன்னேறுகிறது. ஆனால் மறுபுறம் முழங்கிய முரசு சூரிய வெப்பத்தின் தாக்கத்தால் முனங்ககூட இயலாத நிலையில் உள்ளது. பழமானது வெம்பிய நிலையிலிருந்து உள்ளகம் ஊடுருவ விதை தூவி வருகிறது. பிற ஆவியை விட காவியை கோரமானது என்பதையாவும் மக்களும் அறிவார். 



இன்றல்ல...நேற்றல்ல...என்றுமே...

தட்ப வெப்ப காலத்தில் உதித்த சூரியன் பெருங்கிளையுடன் தேடலுகிடமின்றி கதாநாயகானவும் அதன் வெப்பத்திற்கு உதிர்ந்து முளைக்கும் பசுமை வாடாத இலையே மாற்று கதாபாத்திரம் என மக்களின் குருதியோட்டம் இறுதியில் அரங்கேற்றம் நிகழ்த்தும் என்பதே என் சிந்தையில் வரும் ஒளி.

-கவியரசன் தங்கப்பன்


Thanks to google for image copyright.

Tuesday 6 June 2017

தமிழகம் தமிழனுக்கானது!!! தென்றல் வீசுமா???

தமிழகம் தமிழனுக்கானது... இது உண்மையான உணர்வா? அல்லது சுயநல வெறியா? தாங்களே முடிவில் உணர்வீராக...

உணர்வு என்பதோ "வாழ வேண்டும். எல்லோரும் வாழ வேண்டும். நன்றாக வாழ வேண்டும்". வெறி என்பதோ "நல்ல வாழ்ந்தே ஆக வேண்டும்". சுயநல வெறி என்பதோ "தான் தற்பொழுது நன்றாக வாழவேண்டும்".

தமிழ், தமிழன் ஆதியில் தோன்றின எனக்கூறும் நாம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருத்தல் வேண்டும். ஆதியில் தோன்றியவர்கள் நம் முன்னோர்கள் எனில், இன்றைக்கு உலகம் அடைந்திருக்கும் அனைத்து முன்னேற்றம் மற்றும் வேறுபாடுகளுக்கு நம் முன்னோர்களின் பெருந்தன்மையொன்றிய வாழ்நெறியே காரணம் என்பதை உணர முடிகிறது. நாம் தான் முன்னோடி எனில், தற்பொழுது இருக்கும் வேற்றுமைகளை உருவாக்கியதும் நாமே என்பதை மறுக்க முடியாது. உலகம் ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி இயங்குவதாக கூறுவர். அந்த புள்ளி நாம் எனில், தற்பொழுது நிகழும் நன்மை, தீமை அனைத்தும் நம்மாலே என்பதை மறுக்க கூடாது. அதில் தீமையை கலைய இயன்றதை முயல வேண்டுமே தவிர, நன்மையின் மீது கரைபடிய அல்ல.

தமிழகம் என்பது தமிழனின் அகம் என்பதை அடியேன் அறிவேன், மறவேன். மேலும் இது தற்போதைய அகம் என்பதனையும் உணர வேண்டும். ஏனெனில் நம் முன்னோர்களின் அகம் பல என ஒரு கூற்று உலாவி கொண்டிருக்கிறது (தற்போதைய இந்தியா பாகிஸ்தான் எல்லையிலும் நம் முன்னோர்களின் தடம் இருப்பதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது). நம் அகம் மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருப்பதை இது தெளிவுபடுத்துகிறது என அடியேன் போற்றுகிறேன்.

நான் கூறவருவது யாதெனில், "தமிழனை தமிழன் ஆள வேண்டும்  என்ற தகுதியைவிட, தமிழ் உணர்வுள்ளவன் ஆள்வதே சிறப்பின் மிகுதி". இங்கே உணர்வென்பது ஒருவரின் கடந்தகால மொழி, இனம் போன்ற மக்கள் மனநிலை சார்ந்த நிகழ்வுகளில் நெருக்கத்தினையே குறிக்கிறது. மக்கள் மனநிலையினை பிரதிபலிப்பனவாக இருத்தலே சுருக்கம்.

நம்முடைய சிந்து நதிக்கரை தேசத்தில் 'நம்மை பிரிப்பது எந்தவொரு எல்லைகளுமல்ல. விழி மறைக்கும் சுயநல வெறியே சார்ந்த சாதி, மதமே'.

சாதி மற்றும் மதம் என்பதில் அடியேன் பார்வையானது...

"இவை அனைத்தும் தலைமை மனநிலை வேறுபாட்டின்பால் ஏற்பட்ட போட்டி முடிவின் விளைவே. அதன் தொடரில் இன்றோ தலைமையாக இருக்க வேண்டும் என்ற சுயவெறியே இவ்வேறுபாட்டினை மேலும் வலிமைபடுத்தி முன்னோக்கி நகர்கிறது". இன்றைய வேற்றுமை உணர்வானது நாளை உற்றாரிடமே உருவாகி வாழ்வின் வசந்தத்தை வழிப்பறி செய்யும் என்பதில் ஐயமேதுமில்லை. இவையாவும் தெளிவுபடுத்துவது யாதெனில், "அனைத்து வகையிலும் உன்னத உணர்வே உத்தம சிந்தையுடன் விந்தையில் இன்பம் தரும் வல்லமை கொண்டது"

நல்லவர்களும், தீயவர்களும் இல்லா இடமுண்டோ?

"உணர் வெறி கரமே போற்றி
சதிவெறி  விதியை மாற்றி
தமிழ் திலகமிடு தமிழா...

நம்மக ஒலி உலக ஒளியாய்
விழிமுன் வழியாய் மலர

முன்னோரின் புகழ்நறுமணம் பூலோகம் நுகர 
அடியேனின் வழியினை பரிசீலிப்பீராக!!!!

மதமொன்றே தமிழன்
இனமொன்றே திராவிடன்
உணர்வுமொன்றே இந்தியன்...

ஆண் பெண் உணர்வொன்றிய சாதியிரண்டு
குறை மிதை போக்கும் நிரையென வகுப்பு மூறுண்டு

மனிதனாய் மலர்ந்து வாழ்ந்து
உணர்வே மொழியென உறவாடி 
இன்பகடலில் சுதந்திர மீனாக துடுப்பெய்த 
அடியேனின் வழியினை பரிசீலிப்பீராக!!!

தமிழன் என்ற வெறியினால் மட்டும் ஒன்றுபடுவாயெனில், சுயநலவெறியுடன் கொண்ட பலபண்பும் இரண்டற உருண்டு புரண்டு கலங்கத்திற்கு பஞ்சமின்றி வஞ்சனையை நிந்தனை செய்யும்.

உதாரணத்திற்கு.....

ஈழத்தினை கொண்டு முன்னெடுக்கும் அரசியல் இன்றுவரை தொடருகிறாதே. ஏதும் மாற்றமுண்டோ?

சீமான் கருத்தின்படி, அன்புமணி மற்றும் திருமாவளவன் போன்றவர்களை தமிழ் தலைவர்கள் என கொண்டோமெனில், ஈழப்படுகொலை இரத்தக்கரையில் இவர்களின் கரம் ஒட்டுமொத்த தமிழினித்திற்கும் எதிராக இருந்த காங்கிரஸ் கையுடன் உறவாடியதை மறுக்க முடியுமா? அதே கணம் விடுதலை புலிகளுக்கு ஆதரவுகரம் மட்டுமின்றி நிதியையும் வழங்கிய MGR போன்றவரை தமிழ் தலைவனாக மறுப்பதே முரணாக உணரமுடிகிறது.

கூறவரும் கூற்று யாதெனில், MGR போன்ற தமிழ் உணர்வாளனை உச்சமாகவும், அன்புமணி மற்றும் திருமாவளவன் போன்ற தமிழர்களை மிச்சமாகவும் கொண்டு இருகரம்(உச்சம்,மிச்சம்) இணைந்து ஆள்வதன் மூலம் நம் முன்னோர்களின் சிரம் மேலும் உயர்ந்து, புகழ் பூலோகம் முழுவதும் போற்றப்படும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற இலக்கிய வரியின் செய்முறையினை உலகமறியும்.

தமிழ்நாட்டில் தமிழன் என்ற மதத்தினை முன் மொழிந்து ஆண் மற்றும் பெண் என்ற இரு சாதியை உருவாக்கி, வறுமை,நடுத்தரம் மற்றும் வளம் என வருமானத்தின் அடிப்படையில் மூன்று வகுப்புகளாக உரித்து தாம்தான் முன்னோடி என உலகத்திற்கு நம் கொடியினை உயர்த்துவோமாக...

இதன்பால் என் ஆதரவு தற்பொழுது ரஜினிக்கு அல்ல என்பதனை மேலும் தெளிவுபடுத்துகிறேன். கடந்த காலத்தில்  அவர் நம் மக்களின் உணர்வோடத்தில் பயணிக்கவில்லை. அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பதை முடிவெடுக்க இரண்டு தசாப்தமெடுப்பவர் இவர்??????

இன்றைக்கும்  காவேரி, முல்லை பெரியாறு போன்ற நதிநீர் சார்ந்த தமிழ் மக்களின் உணர்வில் இவரின் நிலைபாடு என்னவென   யாருமறியா?

இக்கட்டுரையில் தமிழ் தவறு இருப்பின் சுட்டிக்காட்டுவதனை அடியேன் வரவேற்கிறேன்.


- கவியரசன் தங்கப்பன்

Monday 8 May 2017

பாரதீய ஜனதா திரைபடத்தில் அதிமுக நடிகர்களா!!!

தற்போதைய தமிழக சூழ்நிலையில் பாரதீய ஜனதா எப்படி அதிமுக வை கையில் எடுத்து விளையாட முடியும்??? ஏன்???

தமிழகத்தில் 1.49 கோடி உறுப்பினர்களை கொண்ட தொடர்ச்சியாக வெற்றியை ருசித்து கொண்டிருக்கிற தனிப்பெரும் திறன் கொண்ட கட்சி. சுமார் 135/234 MLA வையும், 50 க்கும் மேற்பட்ட MP யினை கொண்ட தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் உள்ளது. இதனை எவ்வாறு அசைத்து பார்க்க முடியும்?


பாஜக தலைமையிலான மத்திய அரசிற்கு இரண்டு வழிகளே உள்ளது. 
  • ‌கரை படிந்த கைகள் = இதன் மூலம் மிரட்டி பணிய வைத்தல்.‌
  • தகுதியற்றதலைமை.


இதில் இரண்டும் இல்லையென்பதே தற்போதைய அரிய தருணம். தகுதியான தலைமை இருந்தால் எதையும் மாற்றவும், மறுக்கவும் முடியும் என்பதற்கு தற்போதைய நாடகம் உதாரணமே. கூட்டாட்சி கோட்பாடுகளின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்களும் உயர்வானவர்களாக சட்டம் பார்க்கிறது. இவ்வளவு காலம், அதிமுக தலைமையின்(ஜெயலலிதா) அதிகாரமானது எப்படியிருந்தது என்பதை சில நிகழ்வுகளிலே அறிய முடியும்.

  • பிரதமர் மோடி ஜெயலலிதாவை சென்னை போயஸ் கார்டனில் சந்தித்தது.
  • நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜெயலலிதாவை சென்னை போயஸ் கார்டனில் சந்தித்தது.‌ மேலும் தமிழகம் வரும் பல மத்திய அமைச்சர்கள் ஜெயலலிதாவை நேரடியாக சென்னை போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்தது மற்றும் பலருக்கு அப்பாய்ண்ட்மெண்ட் மறுத்ததும் மறைக்க இயலாது.
  • டெல்லி பயணம் என்றாலே மத்திய அமைச்சர் முதல் பல பிரபலங்கள் சந்திப்பிற்காக அப்பாயிண்ட்மண்டுக்காக காத்துகிடப்பார்கள்.
  • ஜெயலலிதா சார்ந்த நிகழ்வுகளுக்கு முந்திக்கொண்டு வாழ்த்து தெரிவிக்கும் தலைவர்கள் என பல காண முடிந்தது.
ஏன்?


ஒரே கல்லில் பல மாங்காய் என்பது நிதர்சணம். குடியரசு தேர்தல் அல்லது குடியேற்றம் வரை மட்டுமே திரைபடத்தின் நீளம். பின் திரையிடலாம் அல்லது மறைவிடமும் செய்யலாம். இப்பொழுது நடக்கும் அரங்கேற்றம் Trailer தான். முழு பட பார்ப்போம் விரைவில்.

சில துளிகள்....

  • ‌அதிமுக வில் பல அணிகள் இருப்பினும், அனைத்திலும் மன்னையின் கரம் எப்போது வேண்டுமென்றாலும் ஓங்கலாம். காரணம், அதிமுக வில் சசிகலா அதிகாரம் இன்று வந்ததல்ல. MGR நோய்வாய்ப்பட்ட காலமுதலே ஊடுருவியதே. அன்றிலிருந்து இன்று வரை, ஜெயா என்னும் திரை மறைவில் சசிகலாவே எல்லாம். ஜெயலலிதாவின் எல்லாமுமாக அரணாய் ஏதோ ஒரு வழியில் திகழ்ந்தனர். உதாரணம், இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் அனைத்து வழக்குகளையும் பார்த்தால் தெளிவு பெறலாம்.‌
  • EPS தனது முதலமைச்சர் அதிகாரத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டார் எனலாம். இதற்கு கேரளா ஆளுநரின் வளமான மத்திய உறவும் காரணம் எனவும் தகவல். அதிகாரமென்பது, வளமான மக்கள் ஆட்சியல்ல. பழிவாங்குதல் மற்றும் பணிதலே.
  • ஆளுநரா? பத்திரிக்கையாளரா? என பார்க்கும் போது, மத்திய அரசிற்கு கோழி எதுவாயினும் குழம்பு சுவையாக இருந்தால் போதுமே என்ற வகையில் உள்ளது.
  • யாரெல்லாம் கரை படிந்தார்கள் எப்படி என்றெல்லாம் அழுத்தமாக எழுதலாம். ஆனால் கால விரயமே. எழுதப்பட்ட முடிவினை நோக்கி தீர்மானிக்கப்பட்ட பாதையில் சூழலுக்கேற்ற கதாபாத்திர மாற்றத்துடன் அரசியல்வாதிகளின் திரைபட அரங்கேற்றம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.


இவையாவும் கடந்த சில நாட்களில் நடந்த மாநில மற்றும் மக்கள் சார்ந்த உரிமை பிரச்சினைகளில் அரசின் நிலைபாடுகளைக்கொண்டு தீர்மானிக்கப்பட்டது.


- கவியரசன் தங்கப்பன்


எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தஞ்சை மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகள்

திரு.எடப்பாடி மற்றும் திரு.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசானது எம. ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டினை வெகுசிறப்பான திட்டங்களுடன் அனைத்து ...